‘மறந்துவிடாதே அடுத்த வாரம் நம்முடைய தொடக்கக் கல்லூரியுடைய பதினைந்தாவது பிறந்தநாள். நம் வகுப்பு மாணவர்கள் எல்லாரும் வருவாங்க. நீயும் கண்டிப்பாக வர வேண்டும்! உனக்காக காத்திருப்பேன். மறந்திடாதே!’
நாட்கள் பல ஓடிவிட்டன. ஆனால் ஆட்கள் மட்டும் மாறுவதே இல்லை. பத்து வருடங்கள் போனதே தெரியவில்லை. இந்த இருபத்தி ஐந்து வயது நிவேதாவின் நிலையைப் பதினெட்டு வயது நிவேதா பார்த்தால் என்ன நினைப்பாள்? சிரிப்பாளா? அழுவாளா? இல்லை திருப்தி அடைவாளா? என் நண்பர்கள் என்னை இப்பொழுது பார்த்தால் என்ன நினைப்பர்? ஆறு வருடமாக ஒரே அலுவலகத்தில் ஒரே வேலையை ஒரே சம்பளத்திற்குச் செய்து கொண்டிருக்கிறேன். நினைத்து பார்க்கும்போதெல்லாம் என்னால் சிரிக்க மட்டுமே முடிகிறது. சிரிக்கா விட்டால் மிக வருத்தப்படுவேன்.
‘புவோன விஸ்டா…புவோன விஸ்டா. தயவுசெய்து தளமேடை இடைவெளியை கவனத்தில் கொள்ளுங்கள்.’ என பெரு விரைவு ரயிலின் இயந்திர குரல் என் சிந்தனைகயைச் சிதைத்தது. அவசர அவசரமாக என் பொருட்களை எடுத்துகொண்டு ரயிலைவிட்டு வெளியேறினேன். உலகமே இடிந்து விழுமே தவிர ரயில் நிலையங்களில் கூட்டம் மட்டும் குறையவே குறையாது. கோப்பை எதுவும் இல்லை. பதக்கம் கிடைக்காது. ஆனால் ஓட்ட பந்தயம் போல் ஓடிக்கொண்டே இருப்பர் சிங்கப்பூரர்கள். ஒரு வழியாக ரயில் நிலையத்தைவிட்டு வெளியே வந்துவிட்டேன். இந்தக் கூட்டத்துடன் போராடியே தினமும் வேலைக்குச் சென்றுகொண்டியிருக்கிறேன். அப்படி இருந்தும் என்னால் பழகிக்கொள்ள முடியவில்லை.
நான் முதல் முறை கல்லூரிக்கு ரயில் பயணம் செய்தபோது எனக்கு வயது பதினேழு. அப்பொழுதெல்லாம், வீட்டுப்பாடத்தைவிட அதிகமாக நான் வெறுத்தது ரயில் பயணங்களையே. எதிர்பாராத நேரங்களில் ரயில்கள் வேலை செய்யாமல் நின்றுவிடும். அந்த நேரங்களில் அலை மோதும் கூட்டத்தின் மத்தியில் ஒரு மணிநேரம் காத்திருப்பது எவ்வளவு கஷ்டமானது தெரியுமா? நான் அதை பற்றி குறை கூறாத நாளே இருந்ததில்லை.
‘நிவேதா? ஆமாம் நிவேதாவே தான்!’ சட்ரென்று குரல் கேட்டு திரும்பினேன். என்ன ஆச்சரியம். ‘காயத்ரி! நீயும் கல்லூரியின் பிறந்தநாள் விழாவிற்கு போகிறாயா? உன்னைப் பார்த்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன.’
‘ஆமாம், என் அன்பு தோழி, பத்து வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு முறையாவது என்னைத் தொடர்புகொண்டாயா? நல்ல தோழி’
எனக்கு எப்படி பதிலளிப்பதே என்றே தெரியவில்லை. தொடர்புகொள்ள எண்ணம் இல்லாமல் இல்லை. ஆனால் என் எண்ணத்தை நிறைவேற்ற எனக்கு நேரம் தான் இருந்ததில்லை. படிப்பு, வேலை, பணம் சம்பாதிப்பது என எனக்கென நிறைய பொறுப்புகள் வந்துவிட்டன. மூச்சு விடுவதற்கே நேரம் இல்லாதபோது நான் எப்படி என் நண்பர்களைத் தொடர்புக்கொள்வேன்?
‘பயந்திட்டியா? நான் கோவமாக இல்லை. உன்னை இங்கு பார்ப்பதற்கு எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா? உன்னையும் நம் மற்ற நண்பர்களையும் பார்க்க இவ்வளவு நாள் நான் ஆர்வத்துடன் காத்திருந்தேன்! சரி சரி, பேருந்து வந்துவிட்டது, வா போகலாம். இந்த பேருந்தை விட்டால் என்ன நடக்கும்னு உனக்கு தெரியும் அல்லவா?’
புன்னகை மலர்ந்த முகங்களுடன் பேருந்தில் ஏறினோம். பேருந்து மெதுவாக புவனா விஸ்தா பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பியது. கைப்பிடியை பிடித்தபடி பேருந்து ஜன்னலின் வழி வெளியே பார்த்தேன். கையில் ரொட்டி துண்டுகளுடன், அலங்கோல முடியுடன் பேருந்தைத் துரத்திக்கொண்டு ஓடும் இரு மாணவிகள் என் நினைவுகளில் தோன்றினர். பேருந்து முன் செல்ல; என் நினைவலைகள் பின் சென்றன.
ஒவ்வொரு காலையும், சரியாக ஏழு ஐம்பதுக்கு, எண் ‘தொண்ணுற்றிரண்டு’ என்ற பேருந்து, இதே பேருந்து நிலையத்திற்கு வரும். அந்தப் பேருந்தை எடுத்தால் மட்டுமே எட்டு மணிக்குத் தொடங்கும் கல்லூரியை நேரத்துடன் அடைய முடியும். ஏன் அதற்கு முன்னாள் வேறு பேருந்தே வராதா என நீங்கள் எண்ணலாம். உண்மை என்னவென்றால் நானும் காயத்ரியும் முழு சோம்பேறிகள். உயிரைக் கூட தியாகம் செய்வோமே தவிர தூக்கத்தை மட்டும் விட்டுக்கொடுக்கவே மாட்டோம். கல்லூரிக்கு தாமதமாக சென்றால், ஆசிரியர்களின் கோபத்தைச் சந்திக்கவேண்டும். அதற்கு பயந்தே நானும் காயத்ரியும் ஒரு நாளும் கல்லூரிக்குத் தாமதமாக போனதே இல்லை. அதுவே எங்களின் மிக பெரிய சாதனை.
‘கல்லூரிக்கு வந்துவிட்டோம், வா போகலாம்.’ என என் கையை பிடித்துக்கொண்டே பேருந்தைவிட்டு கிம் மோ சந்தை பேருந்து நிலையத்தில் இறங்கினாள், காயத்ரி. சுடச் சுட கோழி சாதத்தின் வாசம், காய்கறிகளுடன் நடந்து செல்லும் பாட்டிகள், நாய்களுடன் நடந்து செல்லும் பணிப்பெண்கள், அடுக்குமாடி வீடுகளின் கீழ்த்தளத்தில் உண்ணும் மாணவர்கள். இறுதியாக இந்த இடத்தை எப்படி பார்த்தேனோ அப்படியே இன்னும் மாறாமல் இருந்தது. கோழி சாதத்தின் மணம் என்னை கிம் மோ உணவு அங்காடி நிலையத்திற்கு இழுத்து சென்றது. என்னைப் பின்தொடர்ந்து காயத்ரியும் வந்தாள். பள்ளி சீருடை பாழாவதைப் பற்றிச் சிறிதுகூட கவலைபடாமல் மிளகாய் சாஸ்யைத் தாராளமாக சாதத்தில் ஊற்றி உண்ட அந்த பதினேழு வயது நிவேதவாக உணர்தேன். எந்த ஒரு கவலையும் இல்லாமல், எந்த ஒரு பாரமும் இல்லாமல் கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பறவையைபோல.
‘காயத்ரி, உனக்கு ஞாபகம் இருக்கிறதா? நம்முடைய கல்லூரியிலே, பனி கூழ் ரொம்ப விலையுயர்ந்ததாக இருக்கும் அல்லவா? ஒரு நாள், நாம் இருவர் மட்டும், விலை குறைந்த பனி கூழ் என்பதால், ஒரு பெரிய, முழு பனி கூழ் சாப்பிட்டோமே? அதற்கு பிறகு ஒரு மாதம் முழுவதும் நம்மால் பனி கூழே சாப்பிட முடியாதபடி திகட்டிவிட்டதே. ஞாபகம் இருக்கிறதா?’
மைலோ அருவி போல் ஊற்றியது, காயத்ரி மூக்கிலிருந்து. இறுமிக் கொண்டே வாய்விட்டு சிரித்தாள். அவளைப் பார்த்து நான் மேலும் சிரித்தேன். எங்களுக்குப் பைத்தியம் பிடித்ததுபோல் எங்களை பொது மக்கள் கண்ணுற்றனர். ஆனால் அதைப் பற்றி நாங்கள் சிறிது கூட கவலைப்படவே இல்லை.
‘நிறைய நாட்கள் ஆகிவிட்டன, நான் வாய்விட்டு சிரித்து. உனக்குப் தெரியுமா, என் அப்பா வேலைக்குப் போவதை நிறுத்திவிட்டார். என் அம்மா படிக்கவில்லை. எனவே, அவருக்கும் வேலை கிடைக்காது. வீட்டு சூழலால் வேறு வழி இன்றி ஓர் அலுவலகத்தில் நிர்வாக வேலை செய்துகொண்டிருக்கிறேன். நடிகை ஆக வேண்டும் என்ற என் கனவு கனவாகவே போய் விட்டது. என்ன கொடுமை பார்த்தியா?’ என காயத்ரி சிரித்துக் கொண்டே அழுதாள்.
எதுவும் சொல்லாமல் அவளைப் பார்த்தேன். அவளுக்குள் என்னைப் பார்த்தேன். என் கனவுகளைப் பார்த்தேன். உண்மையிலே கொடுமைதான். ஏழைகளின் கனவுகளுக்குச் சிங்கப்பூரில் இடம் இருக்கிறதா?. மாதச் சம்பளத்தைத் துரத்திக்கொண்டு ஒவ்வொரு நாளும் ஓடுவதில் என்ன வாழ்க்கை இருக்கிறது? கதிரவன் எழுவதற்கு முன் எழுந்து வேலைக்குச் செல்கிறேன். அவன் மறைந்த பின் வேலை முடிந்து வீடு திரும்புகிறேன். இந்த இயந்திர வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு இடமே இல்லை.
‘என்னைப் பாரு, என் சோகக் கதையைச் சொல்லி உன்னைச் சோகமாக்கிட்டேன். சரி சரி வா போகலாம்’ காயத்ரி சொல்வதும் சரிதான். தேவையில்லாத விஷயங்களைப் பற்றி யோசித்து இந்த நாளை வீணாக்கக்கூடாது. நான் என் மனதில் இருந்த கவலைகளை அகற்றினேன். காயத்ரியை ‘கவலைப்படாதே. இதுவும் கடந்து செல்லும்’ என கூறும் பார்வையுடன் பார்த்தேன். அவள் என் கரத்தை பற்றிக்கொண்டு கல்லூரியை நோக்கி நடந்தாள். சாலையைக் கடந்து கல்லூரியின் நூழைவாயிலை நோக்கி சென்றோம். எங்களைக் கல்லூரியின் சட்டாம்பிள்ளைகள்
ஆரவாரத்துடன் வரவேற்றனர். அவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களாக இருப்பார்களோ? அவர்களைத் தானே இப்பணிக்கு அமர்த்துவார்கள்? நான் மீண்டும் வீடு திரும்பியது போல் உணர்ந்தேன். மலரும் நினைவுகள் என் மனதில் திரைப்படமாக ஓடின. எதோ ஓர் ஆனந்தம் என்னை அறியாமலே என்னைத் துள்ளி குதிக்க வைத்தது. எங்களின் வகுப்பறையை நோக்கி எங்கள் கால்கள் சென்றன, எங்களை அறியாமலே.
‘நாங்கள் வந்துட்டோம்’ என எங்கள் வருகையை நாங்களே அறிவித்தவாறு வகுப்புக்குள் நுழைந்தோம். வகுப்பு எவ்வாறு மாறியிருக்கிறது என்று பார்பதற்குள் என்னை யாரோ இறுக்கமாக அணைத்துக்கொண்டனர். அதே ரோஜா நறுமணம்.
‘அதிதி! நீதானே! உனக்குத் தான் நம்ம கல்லூரியைப் பிடிக்காதே. எப்பொழுதுமே குறைசொல்லிக்கொண்டே இருப்பாயே. அப்புறம் எதுக்கு இங்கே வந்தாய்?’ என கலாய்த்தேன்.
‘ஹா ஹா ஹா. அய்யய்யோ நிவேதா செம ஜோக். நான் அப்புறம் சிரிக்கிறேன்’
நானும் அதிதியும் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக்கொண்டே சிரித்தோம். என் வகுப்பைச் சுற்றி முற்றி பார்த்தேன். மின்விசிறி குளிர்சாதன பெட்டியாகவும்,
சிமெண்ட் தரை மரக்கட்டை தரையாகவும், பிளாஸ்டிக் நாற்காலிகள் சுழலும் நாற்காலிகளாகவும் மாறியிருந்தன. பொருட்கள் மாறியுள்ளன. ஆனால் இங்கு இருக்கும் உணர்வுகள் மட்டும் மாறவே மாறாது. அதே ஐந்து பேர் குரங்கு கூட்டம் போல் ஒருத்தரை ஒருத்தர் சீண்டிக்கொள்வது. அதே நான்கு பேர் எல்லாத்தையும் விட அழகே முக்கியம் என கருதுவோர். அதே மூன்று புத்தகப்புழு. அதே இரண்டு சகோதரர்கள். முக்கியமாக, அதே கார்த்திக்.
எத்தனையோ ஆண்களை என் வாழ்வில் சந்தித்திருக்கிறேன். ஆனால் யாரும் கார்த்திக் அளவிற்கு இருந்ததில்லை. இன்னும் அவன் மாறவே இல்லை. அதே சுருட்டை முடி. அதே மினுமினுக்கும் கண்கள். அனைத்துப் பெண்களையும் மயங்க வைக்கும் சிரிப்பு. அவன் சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழி. பத்து வருடங்களுக்கு முன் சாய்ந்தவள் தான் நான். இன்னும் எழவில்லை. அப்பொழுதெல்லாம் அவன் என்னைக் கவனிக்க வேண்டும் என்று நான் செய்த முட்டாள்தனமான விஷயங்களுக்கு அளவே இல்லை. அவனுக்கு பிடித்த உணவு வாங்கித் தருவது. அவன் கல்லூரிக்கு வராதபோது அவனுக்காகக் குறிப்புகள் எடுத்துக்கொள்வது, ஏன், அவனின் துணைப்பாட வகுப்பு முடியும் வரை அவனுக்காக காத்திருப்பது.
அதாவது அவனுக்காக ஐந்து மணிநேரம் காத்திருந்தேன். ஆனால் அவன் என்னை ஒரு போதும் கவனித்ததே இல்லை. சொல்லப்போனால், அவனுக்கு ஒரு காதலி இருந்ததே எனக்குத் தெரியாமல் போனது. என்னைத் தவிர கல்லூரியில் இருந்த அனைவருக்கும் இதைப் பற்றி தெரிந்திருந்தது. அன்றைய நாளை என்னால் மறக்கவே முடியாது. என் வாழ்க்கையே முடிந்துவிட்டதுபோல் அன்று நான் கதறி கதறி அழுதேன். அதைப் பற்றி இப்போது நினைத்தால் எனக்குச் சிரிப்பாக இருக்கிறது. பதின்ம வயதில் நாம் முக்கியத்துவம் கொடுக்கும் விஷயங்கள் இருக்கின்றவே…
‘ஜொள்ளுவிட்டது போதும், உன் அன்பு எதிரி உன்னை நோக்கி வந்து கொண்டியிருக்கிறாள்.’ என எச்சரித்தாள் அதிதி.
ராட்சசனுக்குக் கவுன் போட்டுவிட்டால் எப்படி இருக்குமோ அப்படியே இருந்தாள் ரோஹிணி, அதாவது என் எதிரி. இந்த உலகில் சிலர் பிறரைத் தொந்தரவு செய்யவே பிறந்துள்ளனர்.
இவளுக்கு தற்பெருமை செய்வதே பொழுதுபோக்கு. ‘எனக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?’ ‘எனக்கு எவ்வளவு பெரிய வீடு இருக்கிறது தெரியுமா?’ ‘உன்னைவிட எல்லாருக்கும் என்னைத்தான் பிடித்திருக்கிறது தெரியுமா?’ ‘உன்னைவிட நான் பணக்காரி தெரியுமா?’ நான் எப்படித்தான் இவளுடன் இரண்டு வருடங்கள் ஒரே வகுப்பில் ஒரே காற்றைச் சுவாசித்துக்கொண்டு இருந்தேனோ?
‘நிவேதாவா இது? நீ எவ்வளவு அழகாக இருந்தாய், இப்போது என்ன நடந்தது? என்னைப் பார், நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன்? உன் அழகுக்குக் கொஞ்சமாவது முக்கியத்துவம் கொடு சரியா?’ என்றாள் நிவேதா. நானும் காயத்ரியும் அதிதியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தோம். பிறகு அவளைத் தாண்டிச் சென்றோம்.
ஒருவழியாக விழா மகிழ்ச்சியாக நிறைவுற்றது. ‘அதிதி, காயத்ரி, நான் கிளம்புகிறேன்.
உங்களின் கைத்தொலைபேசி எண் தான் என்னிடம் இருக்கிறதே நான் உங்களைக் கூடிய விரைவில் தொடர்புகொள்கிறேன்.’
என் உடல் இப்பொழுது இந்த ரயிலில் இருக்கிறது. ஆனால் என் மனதை நான் என் கல்லூரியிலேயே விட்டுவிட்டேன். என் ஒரு நாள் கனவு முடிந்துவிட்டது. மீண்டும் காலையில் எழுந்து இதே ரயிலில் பயணம் செய்ய வேண்டும். வாழ்க்கையில் ஒன்றை இழக்கும் வரையில் அதனின் மதிப்பு தெரியாது. அதே போல் தான் கல்லூரி வாழ்க்கையும். கல்லூரியில் இருக்கும் வரை அது சுமையாக தெரியலாம். ஆனால், அதை விட்டு வெளியே வரும் போதுதான் கல்லூரியின் அருமையை நம்மால் உணர முடிகிறது. நம் கனவுகளை உணர்ந்து அதை நோக்கி பயணிக்க நமக்கு கிடைக்கும் இறுதி வாய்ப்பு கல்லூரி.
ஒரு வழியாக வீடு திரும்பிவிட்டேன். மெத்தையில் படுத்தவாறு உட்கூரையைப் பார்த்தேன். என் தொலைபேசி அதிர்ந்தது.
‘நான் கார்த்திக். உன் தோழி எனக்கு உன் எண்ணைக் கொடுத்தாள். உனக்கு நாளை நேரம் இருக்கிறதா? நாம் சந்திப்போமா?’
இயந்திர வாழ்வில் மகிழ்ச்சி இல்லை என யார் சொன்னது?
Pandiarajan Sumathy Sujitha (18-I3)